Saturday, June 6, 2015

தொலைநோக்கு+ வேகம் = எலான் மஸ்க்!


நமக்கு தொழில்நுட்ப உலக ஹீரோக்கள் என்றால் மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ்தான். சற்று தாமதமாகத்தான் ஆப்பிள் நாயகன் ஸ்டீவ் ஜாப்ஸ்.

பில்கேட்ஸ் ஒய்வு பெற்றுவிட்டார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் காலமாகிவிட்டார்.

அடுத்தது யார்?

இதோ வந்தேவிட்டார் எலான் மஸ்க்.

பிரசித்தி பெற்ற ‘பேபால்’ நிறுவனத்தை துவங்கியவர்களில் எலான் மஸ்கும் ஒருவர். பிற்பாடு ‘ஈபே’ அதை வாங்கிவிட, மஸ்க் வெளியேற்றப்பட்டார்.

சளைக்காமல் அடுத்து டெஸ்லா மோட்டார்ஸ் என்ற ஆடம்பர மின்சார கார் நிறுவனத்தை ஆரம்பித்தார். ” சில வருடங்களில், பெட்ரோலிய திரவங்களால் ஓடும் கார்களை சாலைகளிலிலிருந்தே நீக்குவதுதான் என் லட்சியம்” என்று அறிவித்தார் மஸ்க். ஆனால், ஒரு சராசரி டெஸ்லா மின் காரின் விலை 70,000 டாலர்கள்! இருந்தாலும் சந்தையில் அவரது காருக்கு நல்ல வரவேற்பு. லாபம் அதிகம் வராவிட்டாலும் அவர் சளைக்கவில்லை. மின்சார கார்களுக்கு மின்கலன்கள் முக்கியம். எனவே, ” நான் இப்போது இறங்கியிருப்பது மின்சார கார் தொழிலில் அல்ல, பேட்டரி தொழிலில்” என்றார். அதற்கேற்றபடியே, வருடத்திற்கு 5,00,000 லித்தியம் அயான் மின்கலன்களை தயாரிக்க, 5 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் ‘ஜிகா பேக்டரி’ ஒன்றை கட்டி வருகிறார். 2016ல் உற்பத்தி துவங்கும்போது 35,000 டாலர்களுக்கு டெஸ்லா கார்களை தரமுடியும் என்று கணக்கிட்டிருக்கிறார் மஸ்க்.

அதற்கிடையே ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ராக்கெட் நிறுவனத்தை துவங்கினார். விண்வெளிக்கும் பூமிக்கும் இடையே தனியார் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, செவ்வாய் கிரகத்தில் காலனி அமைப்பது போன்றவை அவரது லட்சியம்.

அதே சமயம் சோலார் சிட்டி நிறுவனம். இவரது கூட்டணியோடு நடக்கும் இந்த நிறுவனம் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய மின்சார தயாரிக்க உதவி வருகிறது.

அடுத்து உலகின் அதிவேக ரயில் போக்குவரத்து நிறுவனம் .

இப்படி மற்றவர்கள், “இப்போதைக்கு அதெல்லாம் முடியாது” என்று சொன்னவைகளை பட்டியல் போட்டு, செய்து காட்டி, ஒவ்வொன்றாக “டிக்” அடித்து வருகிறார் மஸ்க்.

தென்னாப்ரிக்காவில் பிறந்து, 1992ல் அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய எலான் மஸ்கின் மீது கேட்ஸ். ஜாப்ஸ் போலவே விமர்சனங்கள் இருந்தாலும், 42 வயதுக்குள் அவர் பல முன்னோடி திட்டங்களை, வெற்றிகரமாக சாதித்து, பில்லியன் கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.

பள்ளியில் மற்றவர்கள் இவரை மிரட்டியதில் துவங்கி, துவங்கிய கம்பெனியிலிருந்தே துரத்தப்பட்டது, மலேரியாவால் மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியது, ஒரு குழந்தையை இழந்தது, மனைவியை விவாகரத்தில் பறிகொடுத்தது என்று பல சோதனைகளை சந்தித்தும், லட்சியவாதியாகவும் யதார்த்தவாதியாகவும் இருக்கும் எலான் மஸ்கின் வாழ்க்கைக் கதை அவரை நிச்சயம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொழில்நுட்ப-தொழில்உலக நாயகனாக நிலை நிறுத்தும் என்பதில் ஆஷ்லி வான்ஸ் என்ற பத்திரிகையாளருக்கு சந்தேகமில்லை.

அதனால்தான், மஸ்குக்கு 60 வயதாகும் வரை காத்திருக்காமல், அவருடன் இப்போதே 12 மாதங்கள் பயணித்து அவரது வெற்றிக் கதையை புத்தகமாக எழுதியிருக்கிறார் ஆஷ்லி. எகானமிஸ்ட் வார இதழ், நியு யார்க் டைம்ஸ் நாளிதழ் போன்றவற்றில் பணியாற்றிய அவர் எழுதியிருக்கும் புத்தகம் இது.

புத்தகம்: எலான் மஸ்க்: ஹவ் எ பில்லியனாய்ர் சி.இ.ஓ ஆஃப் ஸ்பேஸ் எக்ஸ் அண்ட் டெஸ்லா இஸ் ஷேப்பிங் அவர் ஃப்யூச்சர்

நூலாசிரியர்: ஆஷ்லி வான்ஸ்

விலை: ரூ.1,351

பக்கங்கள்: 400

\\